LatshmiharWriter
  • Home
  • Writings
  • Interviews
  • Events
  • Classes
  • Announcements
  • Videos
  • Books
TAEN
Latshmihar

Writer

Stories, essays, and the silence of memory

Links

  • About
  • Writings
  • Interviews
  • Events
  • Classes

Online

© 2026 Latshmihar. All rights reserved.

About →
← All writings

Stories

அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை

ஒருவன் மேல் ஏவப்பட்ட சாபம் எவ்வளவு நாட்கள் அவனைத் தொற்றிக்கொள்ளும் என்ற கணக்குகள் எதுவும் இங்கு உண்டா ? அப்படி இருந்தால் அதைக் கண்டிப்பாகத் தெரிந்து…

லட்சுமிஹர்·27 October 2026·10 min read

ஒருவன் மேல் ஏவப்பட்ட சாபம் எவ்வளவு நாட்கள் அவனைத் தொற்றிக்கொள்ளும் என்ற கணக்குகள் எதுவும் இங்கு உண்டா ? அப்படி இருந்தால் அதைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனிலிருந்து தப்பி ஓட விரும்பிய கால்கள் பல நாட்களாக மாமாவை நச்சரித்த வண்ணமே இருந்தன .

சந்திரன் மாமா இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைத்ததும் பழனிக்குக் கிளம்பிவிட்டோம். வழிநெடுக சுமந்து வந்த அமைதியை அம்மா மட்டும் விசும்பல் அழுகையால் கெடுத்துவந்தார்.. சந்திரன் மாமா தான், அம்மா உட்பட மூன்று தங்கைகளுக்கு அண்ணன். ஏனோ அம்மா அழுவது நாடகம் போல எனக்குத் தோன்றியது. அவர் இருக்கும் போது என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் தொற்றிக்கொள்ள அம்மாவின் அழுகையை முறைத்துப் பார்த்தேன். ‘ஆயிரம் இருந்தாலும் எங்க அண்ணன்’ என்று அம்மா சொன்னது என் மூளைக்குள் ஓடியதைச் சரியாக வாசித்தவளாய் பதில் அளித்தார். அம்மாவிற்கும் அந்த அழுகை போலி எனத் தோன்றியிருக்கலாம்.

போன முறை மாமாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவர்கள் ‘இனி கஷ்டம்’ என்று சொல்லிவிட ..இழவு வீட்டிற்கென தயார்ப்படுத்துதல் நடந்துகொண்டிருந்தது. ‘எழவே முடியாது’ என்று சொன்னவர்களின் கண் முன் மாமா இரண்டே நாட்களில் வேகமாக எட்டு வைத்து நடந்தார் .

மாமாவிற்கு ஒரே ஒரு மகள், பெயர் வித்யா. கல்லூரி முதலாமாண்டு விடுதியில் தங்கிப் படித்து வருகிறாள். எப்போதும் மாமாவை அவர் வேலை செய்யும் பஸ் டிப்போவில் வைத்துத் தான் பார்க்க முடியும். முப்பத்தைந்து வருடத்திற்கு மேல் அதில் அனுபவம் இருந்தது. பழனியை சுற்றி எங்கே அரசு பேருந்து விபத்துக்குள்ளனாலும் மாமா தான் அங்குச் சென்று அந்த பஸ்ஸை டிப்போவுக்கு எடுத்து வருவார் .

மாமா சொல்லிக் கேட்டிருக்கிறேன் விபத்துக்குள்ளான பேருந்தில் இறந்தவர்களின் இரத்த வாடை நிரம்பியிருக்கும் என்று. அது முதலில் ஒரு வித பயத்தைத் தான் கொடுத்தது என்று சொன்னார். பின்னர் போகப் போக அந்த கறைகளுக்கு பின்னால் இருக்கும் உடல்கள் மாமாவுடன் மனம் ஒத்துப் பேசி மகிழ்ந்து வரும் நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.சில நேரங்களில் பெரிய விபத்துக்குள்ளான இடங்களில் ஆட்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னே மாமா அந்த இடத்திற்குச் சென்றதும் உண்டாம். அப்படி எப்பொழுதும் மாமா சொல்லும் ஒரு கதையும் நினைவுக்கு வருகிறது .

மாமா அப்போது தான் வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறதாம்.அப்போது அவருக்கு இருபதுகளின் முற்பாதி. ஒட்டன்சத்திரத்தைத் தாண்டி பழனிக்கு வந்துகொண்டிருந்த பேருந்து நேரெதிரில் பழனி கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்த சுற்றுலா வேன் மீது விபத்துக்குள்ளானது. அந்த விபத்து தான் இதுவரை அங்கு நடந்த பெரும் விபத்துக்களில் ஒன்று. பேருந்தில் பயணம் செய்த பலர் சம்பவ இடத்திலேயே இறக்க நேரிட்டதாம் . அங்கு மாமா இறங்கும் போதே பெரும் ஓலம் நிரம்பி இருந்ததாம். பேருந்து ரோட்டின் மேல் பரப்பிலிருந்து இரண்டு மூன்று சுற்றுகளுடன் அருகிலுள்ள பொட்டல் நிலத்தில் விழுந்திருந்தது. எதிரில் வந்த வேன் சப்பளிந்து கிடந்தது. அதில் வந்த டிரைவர் வேனிலிருந்து பிரிக்கமுடியாமல் இருந்தார். வேனிலிருந்து வெளியே எடுத்து வந்ததில் கணவன் இறந்தும் ,மனைவி பாதி குரலுடன் எதையோ சொல்லப் புரியாமல் அருகில் சென்ற மாமாவிற்கு குழந்தையைப் பற்றித் தான் சொல்கிறாள் அந்த அம்மா என்று புரிந்து கொண்டு ..அங்குச் சிதறிக்கிடக்கும் உடல்களுள் அவர்களின் குழந்தையைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் மாமா. அதன் பிறகு எவ்வளவோ விபத்துக்களைக் கடந்து வந்திருந்தாலும் அந்த விபத்தை மாமா எப்போதும் மறப்பதில்லை. இது மாதிரி சொல்ல அவரிடம் நிறையக் கதைகள் இருந்தது. ஒரு முறை அவரின் ஆசிரியரை இறந்த நிலையில் பார்க்கும் போது ரொம்ப வருத்தப்பட்டதாகச் சொன்னார். அவரின் வீட்டிற்கு போன் அடித்து எப்படிச் சொல்வதென்று தெரியாமல் விட்டுவிட்டேன் என்றார். பாட்டி சொல்வதுண்டு ‘வேலைக்கு போற முன்னாடி வரைக்கும் ரொம்ப ஆசபட்டுட்டு கெடப்பான் இப்ப பேய் அடுச்ச மாதிரி வீட்டச் சுத்துது’. ஆமாம் அந்த வேலை தான் மாமாவிற்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் எத்தனை எத்தனை விபத்துகள் , எத்தனை எத்தனை அழுகுரல்களை மாமா கடந்து வந்திருக்கிறார். உடைந்த பேருந்தைக் கட்டி இழுத்து வரும் போது மாமா என்ன நினைத்துக்கொண்டிருப்பார். அவர் இழுத்து வருவது நூறு பேரின் அழுகுரல்களாக தான் பார்க்கிறேன் .வித்யா போன முறை வீட்டிற்கு வந்த போது கூட சந்திரன் அப்பா நேற்றிரவு எதையோ தேடிக்கொண்டிருந்தார் கேட்டால் அந்த குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னவர் இரவு முழுவதும் அதில் களித்திருக்கிறார். இப்படியாக தன் போக்கில் போக நினைத்தவரை மேலும் உந்தியது அத்தையின் இழப்பும் கூட ஒரு காரணம் .

மாமா எப்போது திண்டுக்கல் வந்தாலும் மறக்காமல் எனக்கு போன் அடித்து திண்டுக்கல் பைபாஸில் இருக்கும் பேக்கரிக்கு அழைப்பார். அவருக்குப் பிடித்த இஞ்சி டீயை குடித்துக்கொண்டு என் மேல் இருக்கும் அக்கறையில் சில கோளாறுகளையும் சொல்லுவார். மாமாவிற்கு என்னை மட்டும் பிடிக்க வேண்டும் என்று நினைத்தவன். இன்றுவரை அப்படிதான் இருக்கிறேன்.‘ வீட்டுக்கு வா மாமா ‘ என்றால் ‘ இருக்கட்டும் இன்னொரு நாள் வரேன், மாப்ள எல்லாத்தையும் கேட்டேனு சொல்லு ‘ என்று என் தோள் மீது தட்டிக்கொடுத்து நான் பைபாஸில் ரோட்டை கடக்கும் வரை நின்று பார்த்துவிட்டுச் செல்வார்.திண்டுக்கல் பைபாஸில் அதே கடை முன் நின்றுகொண்டிருக்கிறோம்..’ அங்க எப்படி இருக்குனு தெரியாது இங்கயே கொஞ்சம் வைத்த நெப்பிக்கங்க ‘ என்று அப்பா இறங்கினார். எனக்கு எதுவும் வேண்டாம் என்று காரிலேயே உட்கார்ந்துகொண்டேன். மாமா மீது ஏனோ அவ்வளவு வெறுப்பு வருகிறது. ஏன் மாமா இப்படிப் பண்ண என்று கேட்க வேண்டும் என்று இருந்தது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது இன்று நாம் விபத்துக்குள்ளானால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.செய்திக் கேட்டு கண்டிப்பாக முதல் ஆளாக வந்துவிடுவார்.

‘இந்நேரம் இவங்க போஸ்டர் மட்டும் தான் அடிக்காம இருக்காங்க போல ‘ என்று மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தவர் என்னிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டார். அப்போது நானும் அதை விளையாட்டாகவே தான் எடுத்துக்கொண்டேன். மாமாவைப் பற்றியான வசவுகளே அவரை எந்த காலங்களிலும் சுற்றி வந்தது. மாமாவிற்கு எப்போதும் பாட்டி தான் தன் பங்கிற்கு ஆதரவாக இருப்பார். அதுவும் மூன்று மகாராணிகளின் எதிர்ப்புக்கு முன்னால் பாட்டியும் தனியாளாக எப்படிச் சமாளிக்க முடியும். அது தங்கைகள் அண்ணன் மீது வைத்திருக்கும் அக்கறையினால் வந்திருந்தாள் மாமா அதைப் புரிந்திருப்பாரோ என்னவோ.. ஆனால் அவரின் மரியாதையைக் கெடுப்பதாகவே அவர்கள் அதை வெளிப்படுத்தினர். மாமாவின் வேலை கூட அவர்களுக்குக் கேவலமாகத் தான் பட்டது. மூத்த பெரியம்மா இப்போது பழனியில் இருக்கும் பெரிய கல்லூரியின் முதல்வர். அங்கு பியூனாக வேலை செய்யும் ஆறுமுகமும் மாமாவும் நெருங்கிய தோழர்கள். சிறுவயது முதல் ஒன்றாகச் சுற்றித்திரியும் சினேகிதர்கள். அவருடன் சேர்ந்து மாமா குடிப்பதும் அவருடன் சேர்ந்து சுற்றுவதும் பெரியம்மாவிற்குப் பிடிக்கவில்லை. அதைப் புரிந்து கொண்ட ஆறுமுகம் மாமாவிடம் பேசுவதையே நிறுத்திகொண்டார். பெரியம்மாவை பொறுத்தவரை அவர்களின் பிள்ளைக்குத் தாய்மாமன் முதல் மரியாதையைச் செய்யும் மிடுக்கோடு இருக்க வேண்டும் என்பதிலேயே இருப்பார்.

“ஏன் மாமா இப்படி உன்ன கரிச்சுக்கொட்டிகிட்டே இருக்காங்களே உனக்கு கடுப்பாகல “

“கடுப்பாகி என்ன செய்ய போறோம் சொல்லு ..”

“அது எப்படி மாமா ..”

“நம்ம ஆறுமுகமும் நானும் ஒன்னாதுல இருந்து நட்பு .. இப்போலாம் என்கிட்ட அவன் பேசுறது இல்ல ..ஏன் சொல்லு ..உன் பெரியம்மா தான் காரணம் ...அவன் குடுமி அவங்க மேடம் கிட்ட இருக்கு ...ஏதோ அவனால தான் நான் குடிக்குற மாதிரி உங்க பெரிம்மா பேசுது. ஒன்னு சொல்லட்டா அவன் என்கிட்ட மட்டும் தான் சிரிச்சு பேசுவான் ... அப்பாவி பையன். அவன பாத்தேனா நீ மறக்காம நான் சொன்னத ஞாபகம் வச்சு அவன் மூஞ்சிய பாரு ...” என்று சொன்னவர் தூங்கிவிடுவார் . எப்படி தான் மாமா இப்படித் தூங்குகிறார். படுத்தவுடன் அடுத்த நொடியே தூங்குவதைப் பார்க்கும் போது அந்த தூக்கத்திற்கும் நாம் தான் பொறாமை கொள்ளவேண்டும் .

வீடு வந்தடைந்தோம் . தாத்தா சம்பாதித்து கட்டிய வீடு , மாமாவின் திராணிக்கு அதை மறுவடிவம் செய்திருந்தார். தாத்தாவின் நினைவு நாளுக்கு மட்டும் தான் அனைவரையும் ஒன்றாக அந்த வீட்டில் பார்க்க முடியும். மூன்று தங்கைகளும் கல்யாணம் செய்துகொண்டு போனது முதல் அந்த வீட்டில் தாயும், மகனும் மட்டுமே குடியிருந்து வந்தனர். இழவு வீட்டில் ஆறுமுகம் தான் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். அவரின் முகத்தைப் பார்க்கும் போது மாமா சொன்னது ஞாபகம் வந்தது. அவர் இனிமேல் எப்போது சிரிப்பார் என்று மண்டைக்குள் உரைத்தது. எங்களுக்கு முன் இரண்டு பெரியம்மாக்களும் வந்திருந்தனர். இருவரும் அழுதால் தங்கள் மானத்திற்கு இழுக்கு என்பது போல அமைதியாக நின்றிருந்தனர். மாமாவினை கிடத்தியிருந்த ஐஸ் பாக்ஸின் பக்கத்தில் அத்தையின் போட்டோவை வைத்திருந்தனர். அத்தையின் இளம் வயது போட்டோ அது. விசும்பல்கள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டுக்கொண்டிருந்தது. ‘ நாம செத்தா எவனும் அழுவக்கூடாது..அப்படி அழுதா ஏதோ நம்ம கிட்ட அவங்க எதிர்பாக்குறாங்கனு அர்த்தம் டா , எதிர்பார்ப்பு இல்லாத ஒருத்தன் கூட சீண்ட மாட்டான்‘ என்று சொன்னார். நான் ஐஸ் பெட்டியில் இருக்கும் மாமாவின் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்து விட்டு வீட்டின் முன் போடப்பட்டிருந்த கொட்டகைக்கு வந்துவிட்டேன். அருகில் பெரிதாக நான்கு பக்கமும் அணைப்போடு நந்தியாவட்டை செடி தன்னுடைய வாசத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது. எப்போதும் இதன் அருகில் ஒரு சேரை போட்டுத் தான் மாமா அமர்ந்திருப்பார். சில நேரங்களில் அவர் அதனோடு பேசுவதைக் கேட்டிருக்கிறேன் .

மாமா அத்தையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஒரு வித சிரிப்பு அவரின் முகத்தில் படர்ந்திருக்கும். மாமா அவரின் காதல் கதையை எத்தனை முறை சொல்லியிருக்கிறார் என்று மறக்கும் அளவுக்குச் சொல்வார். அத்தைக்குப் பிடித்த நந்தியாவட்டை பூவினை எடுத்துக்கொண்டு கால் கடுக்க நடந்து போய் தினமும் கொடுத்து வந்தது என ஒவ்வொரு முறையும் புது தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது அவரின் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் கூட நந்தியா வட்டை பூவை தான் தலையில் வைத்திருக்கிறார் அத்தை. கண்டிப்பாக அது மாமா தந்ததாகத் தான் இருக்க வேண்டும். அத்தையை நான் சிறுவயதில் பார்த்தது . அவ்வளவாக எனக்கு ஞாபகம் இல்லை. அத்தையின் இறப்பு எதிர்பாராததே ..மாமா அதன் பின் வேறு கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை.கல்யாண வாழ்க்கை உட்படத் தங்கைகளுக்கு அண்ணன் வாழ்வில் தோற்றவர் தான் .

வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த நிலத்தை விற்று பஸ் ஒன்று வாங்கினார் மாமா. அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு பஸ்ஸை விற்கும் நிலைக்கு ஆளானார். அதற்கு முழு காரணம் மாமாவின் உலகறியா தன்மைதான் என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் ஏசினர். ‘இதுனாலா தான் அதிகமா ஆச படக்கூடாது, இருக்குறத வச்சுருந்தா அந்த நெலமாச்சும் மிச்சம் இருந்திருக்கும். உங்களுக்கு என்ன வருதோ அத பண்ண வேண்டியது தான’ என்று வீட்டில் விவாதங்கள் சூடாகியது. மாமா எதற்கும் பதில் சொல்லவில்லை. அதன் பிறகு மாமா அவர் பார்த்து வந்த டிப்போ வேலையையே செய்துவந்தார் .

பொருளாதார ரீதியில் மூன்று தங்கைகளும் முன்னேறிக் கொண்டே இருந்தனர். மாமா மட்டும் அதே வீட்டில் தனக்கான இடத்தில் வாழ்ந்து வந்தார். மூன்று மாப்பிள்ளைகளும் சந்திரன் மாமாவிற்கு நெருக்கம் தான். ’ஆயிரம் தான் இருந்தாலும் ‘உங்க அண்ணே ரொம்ப நல்லவரு‘ என்று அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘இத்தனை இருந்தாலும் எல்லாம் லோன்ல தான் இருக்கு. ..எனக்கென்னமோ உங்க அண்ணன் தான் நம்மள விட நிம்மதியா வாழ்ற மாதிரி இருக்கு’ என்று அவர் சொன்னதிற்கு அம்மா ‘ அது பொழைக்க தெரியாத மனுஷன்‘ என்று மாமா வாழ்க்கையில் இதுவரை தோற்ற புராணத்தைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார் .

மாமாவின் வேலை தான் அவரை இதுநாள் வரை காப்பாற்றி வந்திருக்கிறதோ என்றும் தோன்றியது. வேலை ஓய்விற்கு பிறகான வாழ்க்கையே இதுநாள் வரை தன்னை பற்றி சுழன்றவற்றில் தலையைக் கொடுக்க வைத்திருக்கலாம். மாமாவிற்கு கார் , பைக் மேல் இருந்த மோகம் இன்னும் அப்படியே தான் இருந்தது எங்கள் குடும்பத்தில் பாதிப் பேருக்கு கார் ஓட்டச் சொல்லித் தந்தது மாமா தான்.

‘எப்பயும் செருப்பு போட்டு ஆக்சிலேட்டர மிதிக்கக் கூடாது‘ என்று சொல்வார்.

அப்படிதான் எங்கள் குடும்பத்தில் அனைவரும் கார் ஓட்டுவோம்.மாமாவைத் தவிர அனைவரும் கார் வைத்திருந்தோம்.சட்டுன்னு ஒரு கார் வாங்கு மாமா என்று சொன்னதற்கு சட்டுன்னு வாங்கிருவோம் என்று சைகையுடன் சொல்லிச் சிரித்துக்கொள்வார் .

நண்பர்களுடன் சேர்ந்து ஊட்டிக்கு ஒருமுறை டூர் சென்றிருந்தபோது வர வேண்டிய டிரைவர் வராத காரணத்தால் மாமாவை அழைத்துப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது . ‘எனக்காக எதுவும் மாத்த வேண்டாம் , டூர என்ஜாய் பண்ணுங்க ‘ என்று கூறியவர் நாங்கள் எவ்வளவு சொல்லியும் குடிக்கவில்லை‘ வண்டி ஓட்டனும் ‘ என்று முடித்துக்கொண்டார் .அப்படிப்பட்டவரைக் குடிகாரன் என்று பெரியம்மா சொல்லும் போது தான் சிரிப்பு வருகிறது .

மாமா தனது சர்வீஸ் முடியும் தருணத்தில் நிறையவே குடித்து வந்தார். அதுவே அவருக்கு உடல் ரீதியாகப் பல சிரமத்தைக் கொடுத்து வந்தது. சில நேரங்களில் எங்களுக்கு அறிமுகம் இல்லாத பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குப் பின்னால் இருக்கும் கதையை ஒரு போதும் சொல்லாமல் தவிர்த்து வந்தார். தான் எப்படி இருந்தாலும் வித்யாவை அவளுக்குப் பிடித்த மாதிரி படிக்க வைத்தார். ஒரு நாளும் இது வேண்டும் என்று மாமா எவரிடமும் நின்றதில்லை. ரிடைர்மென்ட் காசில் புது கார் வாங்கியிருக்கிறார் என்று சொன்னதும் தங்கைகள் மூவரும் சேர்ந்து மீண்டும் தங்களின் புராணத்தை ஆரம்பித்தனர் .’வயசுக்கு வந்த மகளை வச்சுக்கிட்டு, நாளைக்கு அது கல்யாணம், வேற எதுவும் ஒண்ணுனா அதுக்கு காசு வேணுனு பாக்காம மொத்த பதினஞ்சு லச்சத்துக்கும் கார் வாங்கியிருக்க, இப்படிதான் எங்ககிட்ட ஒன்னும் சொல்லாம பஸ் வாங்கி நட்ட பட்டுப் போன ‘ என்ற தங்கைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் என்னிடம் கார் கலர் நல்லாருக்கா என்று கேட்டவர் தான் மாமா .

வித்யாவின் அழுகை தான் அங்கு நிரம்பியிருந்தது.’என்ன விட்டுட்டு எப்படிப்பா போன’ என்று அவள் அழுவது கேட்டது. வீட்டின் வெளியே வந்த போது ஓரமாக நிறுத்தி வைத்திருந்த மாமாவின் கார் கண்ணிற்குப் பட்டது. ஏனோ இதற்கு மேல் இங்கு இருக்கமுடியாது என்று தோன்றியது. அனைவரின் மேலும் ஒரு வித வெறுப்பு வந்து என்னை ஆட்கொண்டது.அவரின் இறுதி ஊர்வலத்தை இந்த வண்டியில் தான் கொண்டு போக வேண்டும் என்று மனம் அடித்துக்கொண்டது. கண்டிப்பாக இதில் தான் என்று ஒரு முறை எனக்கே சொல்லிக்கொண்டேன். மாமா ஏன் இதுநாள் வரை இப்படிப்பட்ட தங்கைகளிடம் ஒரு முறை கூட கோபித்துப் பேசவில்லை என்று தெரியவில்லை. ‘யாருக்கும் இதுவர மனசு வந்து கேடு செய்யல அது போதாதா இங்க வாழ, சந்தோசமா இருக்கேன் செத்தாலும் என் ஒப்புதலோட எனக்கு புடுச்ச காலத்துலையே செத்துருவேன் ...என்ன எனக்கு புடுச்ச மாதிரி அடிபட்டு செத்தேனா நல்லாருக்கும்‘ என்று மாமா சரக்கு அடித்துக்கொண்டு என்னிடம் சொன்னது நினைவில் இருக்கிறது .

எப்போது இந்த விபத்து நடந்தது என்று கேட்டேன். சுமார் இரவு எட்டு மணிக்குப் பழனி மேம்பாலத்தில் நடந்திருக்கிறது என்றனர். சொல்லப்போனால் அதற்கு முன் அரை மணிநேரம் என்னுடன் தான் பேசிக்கொண்டிருந்தார்.. சாலையைக் கடக்கும் போது எதிரில் வந்த அரசு பேருந்து மோதியிருக்கிறது... உடல் சிதைந்து தூக்கி வரப்பட்டிருந்தவரின் முகத்தைக் கூட காட்டாமல் துணியால் முழுவதுமாக மூடியிருந்தனர். அவர் ஆசைப்படியே இறந்தும் இருக்கிறார் என்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கிறது. காரின் சாவியை வித்யாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு காரை எடுத்தேன், அங்கிருப்பவர்கள் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர் . எங்குச் செல்கிறேன் என்பதை மனதில் நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டேன். வண்டிக்குள் மீதி சரக்கு எதுவும் இருக்குமா என்று தேடினேன், இருந்தது, ‘நெனச்ச மாதிரியே செத்துட்டில்லையா... உன் எழவுக்குயா ‘ என்று ஒரு சீயர்ஸ் சொல்லி அதை ஒரு மடக்கில் குடித்து முடித்தேன்.மூன்றாவது நாள் தளுகைக்கு ஆகுமென ஒரு புல் பாட்டிலை நிறுத்தி வாங்கிக்கொண்டேன்.மாமாவின் முகத்தைப் பார்க்காமல் வந்தது ஏனோ நல்லது போலத் தோன்றியது.மாமா இன்று மட்டும் இறக்கவில்லை என்று மனதில் ஏனோ ஓடிக்கொண்டே இருந்தது. இன்று மட்டும்... இன்று மட்டும் ...

← Previous post

சாகித்ய அகாதமி 'யுவ புரஷ்கார்' விருது - 2025

Next post →

நேர்காணல்